மதுரை: தீபாவளியை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் மற்றும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால், விற்பனை களை காட்டியது. தீபாவளி திருநாளான 31-ம் தேதி புத்தாடை, பட்டாசு, பலகாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஆடு, கோழி இறைச்சிக்கும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
தீபாவளியன்று மதுரையில் அதிகளவில் இறைச்சி விற்பனையானது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, தீபாவளியை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மதுரை மாநகரில் உள்ள மீன், இறைச்சி சந்தைகளில் அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். மாட்டுத்தாவணி, நெல்பேட்டை, தெற்குவாசல், கரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் ஏராளமானோர் குவிந்து, கடலை மீன், பாறை மீன், வால் மீன், நண்டு, இறால் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
நண்டு கிலோ ரூ.600 முதல், இறால் கிலோ ரூ.350 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகள் கிலோ ரூ.350 முதல் ரூ. 800-க்கு விற்பனையானது. வரத்து இல்லாததால் விலை சற்று உயர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். ஒத்தக்கடை பகுதி கடல் மீன் வியாபாரி திருமுருகன் கூறுகையில், “தொடர் மழை மற்றும் தீபாவளி காரணமாக மீனவர்கள் அதிகளவில் கடலுக்கு செல்லவில்லை. இதனால் வரத்து குறைந்தது. வலை மீன்கள் அதிகம் வந்தன.
மஞ்சள் மாவுலா கிலோ ரூ.600, கருங்கனி பாறை ரூ.580, நெத்திலி ரூ.350, நெய் மீன் ரூ.800, 850 மற்றும் வெள்ளக் கிளங்கான் ரூ.480 கிளி மீன் ரூ.500, பச்சை முரள் ரூ.500, குள்ள முரள் ரூ.500, சிலுவன் முரள் ரூ.500, பண்ணை இறால் ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது.
தீபாவளிக்கு இறைச்சி சாப்பிட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க விரும்புவதால் மதுரையில் உள்ள மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.