ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளப்பாடி அருகே கும்டாபுரம் மலை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. தீபாவளி முடிந்து 3-வது நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை பூசிக்கொள்வது வழக்கம். இதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால் நடைகளின் சாணம் கோயிலின் பின்புறம் குவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், கோயில் அருகே உள்ள குளத்துக்கு பக்தர்கள் பீரேஸ்வரர் சாமியை அழைத்துச் சென்று நீராடினர். அதன்பின் சாமியை கழுதை மீது ஏற்றி கோவிலுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து, குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை உருண்டையாக உருட்டி, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசியும், பூசியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த வழிபாட்டால் ஊர் மக்கள், கால்நடைகள் நலம் பெற்று விவசாயம் செழிக்கும். சாணத்தை உடலில் தடவினால் உடலில் உள்ள நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாணியடி திருவிழா முடிந்ததும் பக்தர்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி பீரேஸ்வரர் வழிபட்டனர்.
மேலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பக்தர்கள் விளையாடிய சாணத்தை எடுத்து தங்கள் நிலத்தில் பரப்பினர். 300 ஆண்டுகள் பழமையான இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலிருந்தும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.