சென்னை: அருமையான சமையல் குறிப்புகள்… ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறு வென்றிருக்கும்.
தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.
சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி. டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.