சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த போது, செல்போன் பயன்படுத்திய 200 பேரின் பட்டியலை ரயில்வே போலீசார் தயாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த மாதம் 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன.
19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தமிழ்நாடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, ரயில் விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸில் ரயில் நிலைய அலுவலர் முனி பிரசாத் பாபு புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் போது பணியில் இருந்த நிலைய மேலாளர், புள்ளியாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பான விசாரணையை ரயில்வே போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொன்னேரி ரயில் நிலையம் மற்றும் கவரைப்பேட்டை ஸ்டேஷன் பகுதிகளில் விபத்து நடந்த போது செல்போன் பயன்படுத்திய 200 சந்தேக நபர்களின் பட்டியலை ரயில்வே போலீசார் தயாரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தவிர சிலரை அழைத்து மீண்டும் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.