புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி 2020-ம் ஆண்டு முதல் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது.
ஆனால், தடையை மீறி டெல்லியில் பட்டாசுகள் வெடித்தன. இதனால் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் பட்டாசு தடையை முறையாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி அரசும், டெல்லி காவல்துறையும் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது. அடுத்த தீபாவளி நாளில் பட்டாசு தடையை முறையாக அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரத்தையும் பதில் மனுவில் குறிப்பிட வேண்டும்.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கடந்த 10 நாட்களாக விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டது. அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து இரு மாநில அரசுகளும் விளக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.