சென்னை: தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க, போதிய எண்ணிக்கையில் டாக்டர்களை நியமிக்காமல், ‘வார்ரூம்’ அமைப்பது மட்டும் தீர்வாகாது என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் பேரவைத் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய, சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். இத்துறையின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்காமல் மாற்றம் ஏற்படாது. குறிப்பாக, தமிழகத்தில் 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட புதிய மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
அதேபோல், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு. அரசு மருத்துவர்களுக்கு நீண்ட காலமாக உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. அரசாணை 354ஐ அமல்படுத்தக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.தமிழகத்தில் போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்காதது, தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைக்க அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது எந்த வகையிலும் உதவாது.
தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசால் நியமிக்கப்படும் மகப்பேறு மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால், பணிச்சுமை அதிகமாக உள்ளது. வேலைப்பளு ஒருபுறம். மறுபுறம், சிறப்பு மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் போன்ற நெருக்கடியை மருத்துவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதனால், பணியை தொடர முடியாமல் பலர் வெளியேறுகின்றனர்.
இதனால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறை தொடர்கிறது. தனியார் மயமாக்க வேண்டாம்: தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ‘சீமாங்க்’ மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தேவையான மகப்பேறு மருத்துவர், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
225 ஆண்டுகள் பழமையான சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.