சென்னை: பல்கலை மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- கல்வி நிலைய வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்.
மாறாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் மூலம் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற வேண்டும். குறிப்பாக உணவகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.
மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க, வளாகங்களில் குடிநீர் தொட்டி போன்ற மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் கவர்களுக்கு பதிலாக துணி மற்றும் காகித பைகள் போன்ற மாற்று தீர்வுகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.