அமராவதி: ஆந்திர மாநில நகராட்சி வளர்ச்சித்துறை அமைச்சர் நாராயணாவுக்கு காக்கிநாடா மாவட்ட பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று அம்மாவட்டத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிரச்னை வெடிப்பதாக சிலர் புரளியை உருவாக்கி வருகின்றனர்.
அப்படி எதுவும் நடக்கவில்லை. இது போன்ற பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம். ஜெகன் தனது ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி கடனில் ஆந்திர மாநில கஜானாவை காலி செய்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அனுபவத்தால் மாநிலத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
கஜானா காலியாக இருந்தாலும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் அமராவதி பணிகளை முடிப்போம். 2014-ம் ஆண்டிலேயே அமராவதியை ஆந்திராவின் தலைநகராக மாற்ற முடிவு செய்தோம். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியலால் தாமதமானது,” என்றார்.