திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி கோட்ட பால் உற்பத்தியாளர் சங்க வளாகத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- திருப்பூரில் தற்போது தினமும் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதை 50 ஆயிரம் லிட்டராக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளோம்.
பொதுமக்களின் நலனுக்காக பால் விலையை குறைத்தது தி.மு.க. தான். ஆவினில் நிறைய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளிக்கு ஆவின் தயாரிப்புகள் ரூ. 25 கோடியை தொட்டுள்ளது. பால் தவிர, நெய், பால்கோவா, இனிப்புகள், மிக்சர் மற்றும் பன்னீர், ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பொருட்களையும் ஆவினில் வழங்குகிறோம்.
கோயம்புத்தூரில் ஆவின் பன்னீருக்கான பிரத்யேக விற்பனை நிலையத்தை திறக்க உள்ளோம். இவை அனைத்தும் பொதுமக்களின் நலனுக்காகத்தான். ஆவின் காரணமாக தனியார் நிறுவனங்கள் பால் விலையை கட்டுப்பாடில்லாமல் உயர்த்தாது. அரசுப் பள்ளிகளில் காலை உணவு, இலவச பேருந்துப் பயணம் என சமூகத்துக்குப் பயன் தரும் திட்டம் ஆவின்.
அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த அரசு செயல்படுகிறது. நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசாங்கத்தின் சாதனைகளாக என்னால் சொல்லிக்கொண்டே போக முடியும். தி.மு.க. அரசு சாமானியர்களுக்கான அரசு. தமிழகத்தில் பால் விற்பனையை 6 லட்சம் லிட்டர் உயர்த்தியுள்ளோம்.
திருநெல்வேலி போன்ற பெரிய மாவட்டங்களில் பால் உற்பத்தி குறைந்ததை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் விவசாயிகள். மறுபக்கம் இரு தரப்பையும் நுகர்வோராக பார்க்க வேண்டும். விலையை உடனடியாக நுகர்வோருக்கு வழங்க முடியாது. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பாலை கொள்முதல் செய்ய முடியாது.
அதனால், அரசுக்கு இரு தரப்பிலிருந்தும் இடி. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகைக்கு ரூ. 143 கோடி. தமிழகம் முழுவதும் செயல்படாத பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.