திருச்சி: திருச்சியில் கலைஞரின் பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் கடந்த ஜூன் 27-ம் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். நூலகம் அமைப்பதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.
முதற்கட்டமாக திருச்சி டிவிஎஸ் டோல் கோடு அருகே நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரைதளம் உட்பட மொத்தம் 8 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தை கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டட வடிவமைப்பை தயார் செய்து ஆலோசகர்களை தேர்வு செய்ய பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் திட்டம் தேர்வு செய்யப்பட்ட பின், கட்டுமான பணிக்கான டெண்டர் கோரப்படும். திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பிரமாண்ட நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களுக்கு தனி பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, அறிவியல் மையம், விளையாட்டு மற்றும் ரோபாட்டிக்ஸ் பிரிவு, ஏஐஐ (செயற்கை நுண்ணறிவு பிரிவு), அறிவுசார் மையம் போன்றவை உள்ளன.
டெல்டா மாவட்டங்களில் பெருமை சேர்க்கும் வகையில் கலையரங்கம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, 2026 ஜனவரியில் நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் பயன்பாட்டுக்கு,” என்றார்.