பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. சுல்தான்நகர் மற்றும் மல்லிகார் ஜூன் நகர் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
கனமழை காரணமாக காவிரி மற்றும் கனிகா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் பாகமண்டலாவில் 18 செ.மீ மழையும், மடிகேரியில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கர்நாடக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 550 கன அடி நீர் வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 13,437 கன அடியாக அதிகரித்தது. அதேபோல், ஹாரங்கி அணைக்கு 2,562 கன அடியாகவும், ஹேமாவதி அணைக்கு 7,695 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து நிமிடத்திற்கு 20 ஆயிரத்து 113 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.