சென்னை: மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2022-2023 வரையிலான 5 ஆண்டு கட்டண ஆணையை அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு இழப்பீடாக சுமார் ரூ.37 ஆயிரம் கோடியை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. 2023-24-ம் ஆண்டிற்கான செலவுகளுக்குப் பிந்தைய வருவாய் ரூ. 15,843 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட கணிசமான வட்டிச் சுமையால் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் வட்டி சுமை சுமார் ரூ.16 ஆயிரம் கோடியாக உள்ளது. மத்திய அரசின் நிதி நிறுவனங்களான ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்இசி) மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி) ஆகியவற்றில் இருந்து பெறப்படும் கடனுக்கு 10.5 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. இதை 8 சதவீதமாக குறைக்க வேண்டும். பிரதம மந்திரி சூர்யாகர் முஃப்ட் பிஜ்லி யோஜனா (PM-SURYAGHAR) திட்டத்தின் கீழ், மத்திய மின் அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடுதல் நிபந்தனையை அறிமுகப்படுத்தியது.
இந்த ஒப்பந்தத்தில் இலக்குகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மேலும் புதிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படக்கூடாது. புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால், தமிழக அரசின் ஒப்புதலுடன் இலக்குகளை இறுதி செய்ய வேண்டும். புதிய துணை மின்நிலையங்கள் நிறுவுதல், வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கான ரூ.3,246 கோடி திட்டக் கருத்துருவுக்கு மத்திய மின் அமைச்சகம் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தில், 2,640 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி திட்டங்களும், 520 மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீர்மின் சேமிப்பு திட்டமும் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 21,146 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறனுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் 6,000 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ராய்கர் – புகளுர் – திருச்சூர் 800 கி.வோ. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கட்டணத்தை பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த கட்டணச் சுமை தென் பிராந்திய மின் விநியோக நிறுவனங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த பாரபட்சமான நடவடிக்கை தென் மாநிலங்களின் நலனுக்கு உகந்தது அல்ல. எனவே, இதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த கூட்டத்தில், மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், தமிழ்நாடு மின் வாரிய தலைவர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.