சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் பாதாள சாக்கடையில் இருந்து 30 மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் தெருக்கள் மற்றும் வளாகங்களில் பாதாள சாக்கடை இணைப்பு பெறுவது கட்டாயமாக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் கே.என்.நேரு, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் பாதாள சாக்கடை சட்டத் திருத்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-
தனியார் வளாகம் அல்லது தனியாரின் அருகில் உள்ள இடத்திலிருந்து 30 மீட்டருக்குள் வாரியத்தின் கழிவுநீர் அமைப்பு இருக்குமானால் அந்த வளாகத்தின் உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளர், தனியார் தெருவின் உரிமையாளர், கழிவுநீர் வாரியத்தின் சாக்கடையில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான இணைப்பு வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டவுடன், கழிவுநீர் இணைப்புக்காக வாரியத்தால் ஏற்படும் செலவுகளை வளாகத்தின் உரிமையாளர், ஆக்கிரமிப்பாளர் அல்லது தெருவின் உரிமையாளர் ஏற்க வேண்டும்.
மேலும், அவர்கள் வகுத்துள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கழிவுநீர் இணைப்பு வழங்கப்படும்.
மேலும், வாரியத்தின் சாக்கடையிலிருந்து 30 மீட்டருக்குள் எந்த வளாகமும், தனியார் தெரு உரிமையாளரும் அல்லது குடியிருப்பவர்களும் கழிவுநீர் தொட்டி, கழிவுநீர், கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் போன்ற கழிவுநீரை அகற்றுவதற்கான பிற வழிகளைத் தொடரக்கூடாது.
இதை மீறினால் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். தொடர்ந்து மீறினால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதங்கள் அந்தந்த பகுதியின் நிர்வாக பொறியாளரால் நிர்ணயிக்கப்படும். உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை நிர்வாக இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் மேல்முறையீட்டை தாக்கல் செய்யாததற்கு, மேல்முறையீட்டாளர் போதுமான காரணம் இருப்பதாக நிர்வாக இயக்குநர் கருதினால், அவர் 30 நாட்களுக்குப் பிறகு செய்யப்படும் மேல்முறையீட்டையும் ஏற்கலாம்.
மேல்முறையீடுகளுக்கு 60 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.