தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 636 கிலோ எடை கொண்ட 21 பீடி இலை மூட்டைகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு தொடர்ந்து பீடி இலைகள், மஞ்சள், பூச்சி மருந்து, அழகுப்பொருட்கள், கடல் அட்டை, போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் ‘கியூ’ பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார் மற்றும் சுங்க இலாகாவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து ‘கியூ’ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர்கள் கீதன், ராமர் உட்பட போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது குலசேகரப்பட்டினம் வடக்கூர் கடற்கரையில் இருந்த படகில் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்ததை கண்ட கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த பண்டல்களையும், இருசக்கர வாகனங்களையும் விட்டு விட்டு கடத்தலில் ஈடுபட்டவர்கள் படகு மூலம் தப்பி சென்றனர்.
இதைத்தொடர்ந்து, கடற்கரையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 636 கிலோ எடை கொண்ட 21 பீடி இலை மூட்டைகளையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.