புதுடெல்லி: டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்கள் காற்றின் தரக் குறியீட்டை 400-க்கு மேல் பதிவு செய்துள்ளன. இது காற்று மாசுபாட்டின் மிக மோசமான வடிவமாகும். நேற்று முன்தினம் 334 ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை 9 மணி நிலவரப்படி 428 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக டெல்லியின் ஆனந்த் விஹார், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மந்திர் மார்க், பட்பர்கன்ஜ் ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. மலைப்பாங்கான பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடும் அதனுடன் தொடர்புடையது.
டெல்லியில் பனிமூட்டம் காரணமாக 115 விமானங்களின் வருகையும், 226 விமானங்கள் புறப்படுவதும் தாமதமானது. டெல்லியில் காற்றின் வேகம் மிகக் குறைந்ததால் நேற்று கடும் பனிமூட்டம் காணப்பட்டது. காற்று மாசு அளவு இன்று மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.