தாம்பரம்: குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் கிரிதரன் (34). இவருக்கு திருமணமாகி மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6) மற்றும் ஒரு வயது மகன் சாய்சுந்தரேசன் இருந்தனர். இந்நிலையில், கிரிதரன் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடந்த நான்கு மாதங்களாக மேலாளராக பணியாற்றி வந்தார்.
குழந்தையும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தது. இந்நிலையில் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, எலி தொல்லையை கட்டுப்படுத்த தியாகராய நகரில் இயங்கி வரும் பெஸ்ட் கன்ட்ரோல் என்ற தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த 13-ம் தேதி தனியார் நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் வந்து இவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் எலி மருந்தை தெளித்தனர்.
மேலும், வீட்டில் எலிகள் வராமல் இருக்க மருந்து தெளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, மருந்தில் இருந்து காய்ச்சல் பரவியதால் வாந்தி, பேதி ஏற்பட்டு வைஷாலினி திடீரென உயிரிழந்தார். இதேபோல் மற்றொரு குழந்தை சாய்சுந்தரேசனும் உயிரிழந்தார்.
மேலும், கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ராவை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலட்சியத்தால் 2 குழந்தைகள் உயிரிழக்க காரணமான தனியார் நிறுவன உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தினகரன், சங்கரதாஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில், ஊழியர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி தனது குழுவினருடன் நேற்று இரவு சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதில் தடயவியல் துறை அதிகாரிகள் அனைவரும் முகமூடி, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.
அப்போது, வீட்டில் இருந்த எலி மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் குழந்தைகள் இறந்ததை அதிகாரிகள் குழு கண்டுபிடித்ததாக தெரிகிறது. எனினும், விசாரணை மற்றும் தடயவியல் துறையின் அறிக்கைக்கு பிறகே, எலி மருந்தில், அரசால் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இரண்டு பிள்ளைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெற்றோருக்கு இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இறந்த 2 குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்கு அனுமதிப்பது தொடர்பான கையெழுத்தை பெற்றோரிடம் முறையாக தெரிவித்து குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிகிறது. அதுவரை பிரேதப் பரிசோதனை நடத்தப்படாது என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.