கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு அழகிய நிழல் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. முறையான கழிவு மேலாண்மைக்கான முன்னோடி முயற்சியாக இது பாராட்டப்படுகிறது. கிட்டாம்பாளையம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு தினமும் சராசரியாக 600 கிலோ குப்பை சேகரமாகிறது.
கிராம மக்களே குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்து வைக்கின்றனர். 200 கிலோ கழிவு பிளாஸ்டிக் ஆகும். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து பயன்படுத்த ஊராட்சி நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம் சேகரிக்கும் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளை தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி, அங்குள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்து, பில்டிங் டாப் ஷீட்கள், பக்கவாட்டு சுவர்களுக்கு கனமான ஷீட்கள், தரை அமைக்க பேவர் பிளாக் போன்ற கற்கள், இருக்கைகள் என பல வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இப்பொருட்களை கொண்டு கிட்டாம்பாளையம் நால்ரோட்டில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் அழகிய நிழற்கூடம் அமைக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் திறம்பட மாற்றப்பட்டுள்ளது. கிட்டம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வரும் நிலையில், இம்முயற்சியின் மூலம் எங்கள் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை நிர்வகிக்க முடியும். இந்த முயற்சி மக்களிடையே மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை பரப்பும் என நம்புகிறோம். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு பொது இடங்களில் வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொதுச் சொத்துக்களை மேம்படுத்தும் முயற்சியாக இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம். இந்த முயற்சியில் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
மக்களே, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதில் எங்கள் கிராம மக்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்ற தனியார் நிறுவனங்கள் மறுசுழற்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். கிட்டம்பாளையம் ஊராட்சியின் இந்த முயற்சி மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என நம்புகிறோம். இம்முயற்சியின் வெற்றி, கழிவு மேலாண்மையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.