பாட்னா: பீகாரில், தமிழக பழங்குடி தம்பதியுடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார். இது அந்த தம்பதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில், பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி, பீகார் மாநிலம், ஜமுய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவரை பழங்குடியின மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களின் இசை வாத்தியத்தை கண்டு ஆச்சரியம் கொண்ட பிரதமர் மோடி, அதை வாங்கி தானும் இசைத்து மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கண்காட்சியில், பழங்குடியின மக்களின் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அங்கு அரியலூரைச் சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் கடை ஒன்றை அமைத்திருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, தமிழக பழங்குடியின தம்பதியினர், தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த பொருட்களை பற்றி கூறினர்.
பின்னர் அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி அவர்களுடன் ஒரு செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.