திருவனந்தபுரம்: நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்காததை கண்டித்தும், தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வயநாடு மாவட்டத்தில் வரும் 19-ம் தேதி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை மற்றும் முண்டகை ஆகிய இடங்களில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல ஏக்கர் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் நாசமாகின. இந்த பயங்கர நிலச்சரிவில் ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவித்து ரூ.1500 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேரள அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், நிலச்சரிவு ஏற்பட்டு பல மாதங்கள் ஆன நிலையிலும், கேரளாவுக்கு இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கேரள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. 2024-25-ல் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்காக கேரள அரசுக்கு ரூ.388 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் 19-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு வயநாடு மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.