குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பனிமூட்டம் மற்றும் கடும் குளிருடன் கூடிய கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி வார்டு 29-க்கு உட்பட்ட காட்டேரி ரோடு பகுதியில் ருக்மணி என்பவரது வீட்டின் முன் மண் சுவர் இடிந்து விழுந்தது.
இப்பகுதியில், வீடுகள் பாதுகாப்பின்றி தொங்குகின்றன. ஏற்கனவே, இப்பகுதியில் எவ்வித வளர்ச்சி திட்டங்களும் இல்லாத நிலையில், மழை மற்றும் கழிவுநீர் செல்லாததால், பாதிப்பு ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இரவு பகலாக தொடர் மழை பெய்து வருவதால், இங்குள்ள வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் நகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி, தடுப்புச்சுவர், கழிவுநீர் கால்வாய்களை முறையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.