அமராவதி: மகாராஷ்டிரா தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அமராவதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசியதாவது:- எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கலாம் என்றும், 16 பெரும் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்யலாம் என்றும் அரசியல் சட்டத்தில் எங்கும் எழுதப்படவில்லை. அரசியலமைப்பை நாட்டின் மரபணுக்களாக காங்கிரஸ் பார்க்கிறது.
ஆனால், ஆளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு இது வெற்றுப் புத்தகம். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்களவையில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். இடஒதுக்கீட்டிற்கான 50 சதவீத உச்ச வரம்பு நீக்கப்பட வேண்டும் என்று கூறினேன். ஆனால் நான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்கிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபரை போல் மோடியும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காக நான் நின்றதால், எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜகவால் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவை விவசாயிகளையும் சிறு வியாபாரிகளையும் கொல்லும் ஆயுதங்கள். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. தொழிலதிபர்கள் உங்களை பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை, இந்திய மக்கள் செய்தார்கள் என்பதை மோடிஜியிடம் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.