புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அளவு ‘கடுமையான’ பிரிவில் உள்ளதால், நேற்று முதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், பிஎஸ்3 உள்ளிட்ட பழைய வாகனங்கள் மற்றும் மாசு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘கடந்த வெள்ளிக்கிழமை மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 4,855 வாகனங்களுக்கு ரூ.4.8 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த விதிகளை மீறும் வாகனங்களுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. தனியார் பிஎஸ்-3 பெட்ரோல், பிஎஸ்4 வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கிராப்-3 விதிமுறை அமலுக்கு வந்த முதல் நாளே (வெள்ளிக்கிழமை) விதிகளை மீறிய பிஎஸ்3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்4 டீசல் வாகனங்களுக்கு 550 செலான்கள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. முதல் நாளில் மொத்தம் 5.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் புகை மண்டலம் நிலவுவதால், நவம்பர் 24-ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.