ஊட்டி : கோடை சீசனில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில், அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஊட்டி தாராவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண, வெளிமாநிலங்கள், வெளி நாடுகள், தமிழகத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டிகளில் லட்சக்கணக்கான மலர் செடிகள் நடப்படும். இந்த மலர் செடிகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து பூக்க ஆரம்பிக்கும்.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். அப்போது பலவிதமான வண்ண மலர்கள் பூக்கும். மலர் செடிகள் நடப்பட்ட தொட்டிகள் அலங்கரிக்கப்படும். இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்த மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடுவதற்காக விதை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 6 மாதம் கழித்து பூக்கக்கூடிய பென்சீனியம், பெட்டூனியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகளில் விதை சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. அதேபோல், விதைகள் சேகரிக்கப்பட்ட பூச்செடிகள், மழையில் அழுகிய செடிகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், “2025 மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்கு பூங்கா தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.முதற்கட்டமாக விதைகள் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. சில மலர் செடிகள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. 6 மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் விதைகள் சேகரிக்கும் பணியும் விரைவில் நடைபெற்று வருகிறது. நாற்றுகள் தயாரானவுடன், பூக்கும் மாதத்திற்கு ஏற்ப விதைகளை நடவு செய்யத் தொடங்கும்.
தற்போது, சாமந்தி, சால்வியா, பெட்டூனியம், போர்ட்லகா மற்றும் டெல்பினியம் ஆகியவற்றின் விதைகள் சேகரிக்கப்படுகின்றன. நாற்றுகள் உற்பத்திக்குப் பின், படிப்படியாக நடவுப் பணி துவங்கி, பிப்ரவரி வரை தொடரும். அதேபோல் பூந்தொட்டிகளிலும் மண் அள்ளும் பணி விரைவில் தொடங்கப்படும். இதில், விதைகள் நடுவதுடன், மலர் செடிகள் நடும் பணியும் மேற்கொள்ளப்படும், என்றார்.