சபரிமலை: இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். 18 படிகள் வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் செல்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்பாக படிகளில் ஏறுவதையும், முதியவர்கள், குழந்தைகளை கை தூக்கி விடுவதற்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போலீசார் 15 நிமிடம் என்ற அடிப்படையில் பணி மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் 18-ம் படிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெரிசல் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 18-வது படியில் ஏறியவுடன் மேல் தளத்தில் உள்ள இரும்பு பாலம் வழியாக மாற்றுப்பாதையில் செல்லாமல் நேரடியாக தரிசனம் செய்யலாம்.
அவர்களுக்கு உதவ கூடுதலாக ஒரு நபர் செல்லலாம். இந்த வசதியால் வயதானவர்கள், குழந்தைகள் சிரமமின்றி குறைந்த நேரத்தில் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “நெருக்கடி இல்லாத நேரங்களில், 18-ம் படி ஏறும் பக்தர்கள், கொடியை வழிபட்டு, மூலஸ்தானத்திற்கு நேரே செல்லலாம்.
தற்போது இந்த வழித்தடத்தில் நெரிசல் அதிகரித்துள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இரும்பு மேம்பாலம் வழியாக சன்னதியின் பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளுக்கும், மூலஸ்தான பாதை வழியாகவும் தரிசனம் செய்யலாம்,” என்றார்.