சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் 9491 காலியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவு, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரம் கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி தற்போது கணினி வழிச் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் கடந்த 9-ம் தேதி முதல் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்து வருகின்றனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வரும் 21-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான எக்ஸ்-இல் நேற்று வெளியிட்ட பதிவில், “தேர்வுதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர் நல வாரியம் வழங்கிய சான்றிதழ் அல்லது ஓய்வூதியத் தொகையை அறிவிப்பின் பின் இணைப்பு II-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், முன்னாள் ராணுவத்தினர் என கூறிக்கொள்ளும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அரசு பணியில் தங்களின் வேலைவாய்ப்பு குறித்த சுய அறிவிப்பு படிவத்தை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்பட்ட கடைசி நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் முப்படையிலிருந்து விடுவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள், படைப்பிரிவின் தலைவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழையும், உறுதிமொழி படிவத்தையும் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பின் இணைப்பு II. ஆதரவற்ற விதவை என உரிமை கோரும் விண்ணப்பதாரர்கள் உரிய படிவத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், கணவர் பெயர், கணவர் இறந்த தேதி மற்றும் தற்போதைய மாத வருமானம் ஆகியவை சான்றிதழில் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உரிய அதிகாரியிடம் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஆன்லைனில் பெறாத சான்றிதழில் அலுவலக முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.