சென்னை: சிவப்பரிசி சேவை…நார்ச்சத்து நிறைந்த சிவப்பரிசி சேவையை காலை டிபனாக செய்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும். சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.
தேவையானவை
சிவப்பரிசி – 250 கிராம்
தக்காளி – 6 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
சோம்பு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சிவப்பரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லிகள் சூடாக இருக்கும்போதே சேவை அச்சில் போட்டுப் பிழிந்தெடுத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்து ஆறிய சேவை சேர்த்து நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மிகவும் சத்தான டிபன் ரெடி.
குறிப்பு: தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பு சேவையும் செய்யலாம். இந்த சேவையைச் ‘சந்தவை’ என்றும் சொல்வார்கள்.