சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தென் தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. 21-ம் தேதிக்குள் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நவம்பர் 21 முதல் நவம்பர் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 25-ம் தேதி கடலோர தமிழகத்தின் பல இடங்களிலும், உள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். வங்காள விரிகுடா பகுதிகளில் நவம்பர் 21-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். நவம்பர் 22 ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்குப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும்.
நவம்பர் 23 அன்று, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். அரபிக் கடல் பகுதிகளில் இன்று லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.