சென்னை: “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதன் எதிரொலிக்கு முன் அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்துள்ள இந்தக் கொலை, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடக்காத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை இந்த சம்பவம் மீண்டும் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பொதுமக்கள் தொடங்கி அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே தமிழக அரசு விழித்துக்கொண்டு தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிபுரியும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றார்.