சென்னை : “”சிறு மற்றும் குறுந்தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த, அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க, தொழில்முனைவோர் முன்வர வேண்டும்,” என, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறினார்.
இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்களுக்கான ‘லகு உத்யோக் பாரதி’ அமைப்பு சார்பில், தொழில்முனைவோருக்கான ஒரு நாள் கருத்தரங்கு, ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடந்தது.
கருத்தரங்கை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் திட்டங்களை எப்படி எளிதாகப் பெறுவது என்பது குறித்த சரியான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் அவர்களுக்குத் தேவை. தொழில்நுட்பக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதால், உற்பத்தியையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க முடியும்.
தற்போது, ஏற்றுமதியில் இந்தியா முன்னோடி நாடாக உள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம், சிறு மற்றும் குறு தொழில்கள் அடுத்த கட்டத்தை எட்டும்போது, சீனாவைப் போல ஏற்றுமதியை மேம்படுத்த முடியும்.
இந்தியாவில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் தொழில் வளர்ச்சி அடையலாம். இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதை முறையாக பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.