வில்லனாக கமல் ஹாசன் நடிப்பில் கல்கி ஏடி 2898 வெளியானது. முதல் நாளே, ஒரே நாளில் 98 கோடி வசூலை அள்ளிக்குவித்து சாதனை படைத்துள்ளது. படத்தில் வில்லனாக கமல் ஹாசனின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்து கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், எஸ்ஜே சூர்யா, விவேக், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் 96 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தக் லைப்’ படத்திலும் தற்போது கமல் ஹாசன் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கமல் ஹாசன், இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் இப்போது மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கமல் ஹாசன், ஷங்கர் இயக்கிய எந்திரன் மற்றும் 2.0 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” I ROBOT’ என்ற ஆங்கில நாவலை வைத்து நான் சுஜாதா மற்றும் ஷங்கர் பல்வேறு ஐடியாக்களை கலந்தாலோசித்தோம். அப்போது அந்த கதையில் நான் நடிக்கவேண்டும் என்றும் நினைத்தார். அதற்கான ஸ்க்ரீன் டெஸ்டும் நடந்தது. ஆனால் சம்பளம், டேட், அப்போதைய மார்க்கெட் நிலவரம் மற்றும் சில காரணங்களால் படத்தை எடுக்கும் எண்ணத்தை சுஜாதா கைவிட்டார். ஆனால் அவரது நண்பரான ஷங்கர் அந்த ஐடியாவை வைத்து வெற்றிகரமான சினிமா அனுபவத்தை தன் படைப்பின் மூலம் வெளிக்கொணர்ந்தார் என்று கூறினார் கமல் ஹாசன்.
மேலும், அதேபோல் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லன் பக்ஷி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, கமல் ஹாசன் ஷங்கரிடம் நான் இன்னும் சிறிது காலம் ஹீரோவாக நடிக்க விரும்புகிறேன் என்று கூறினாராம். எப்போதும் ரஜினியுடன் படம் பண்ணவேண்டும் என்பது குறித்து கமல் ஹாசன் அடிக்கடி கூறுவது உண்டாம். அதன் பின்தான் பக்ஷி கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய் குமாரை தேர்வு செய்தாராம் ஷங்கர்.