‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசை பிரிவில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தமன், சாம் சிஎஸ், அஜ்னிஷ் லோக்நாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து தெரிவிக்கப்பட்டாலும், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. படக்குழுவும் இது குறித்து அமைதி காத்து வந்தார்கள்.
இந்நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது, மேடையில் தயாரிப்பாளர் ரவியைக் குறிப்பிட்டது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ‘புஷ்பா 2’ மேடையில் தேவி ஸ்ரீ பிரசாத், “தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமா இருந்தாலும் சரி ஒரு பணிக்கான பெயராக இருந்தாலும் சரி அதைக் கேட்டுப் பெற வேண்டும்.
நாம் கேட்கவில்லை என்றால், நமக்குத் தகுதியான நன்மதிப்பை யாரும் கொடுக்க மாட்டார்கள். ரவி சார்… பாடலையோ பின்னணி இசையையோ சரியான நேரத்தில் தரவில்லை என்று என்னை விமர்சிக்கிறீர்கள். நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் காதல் இருக்கும் இடத்தில் புகார்கள் இருக்கும். இருந்தாலும் காதலை விட என் மீது உங்களுக்கு புகார்கள் அதிகம் என்று தெரிகிறது.
இப்போதும், ‘தவறான நேரம், தாமதமாக வந்தீர்கள்’ என்கிறீர்கள். நான் என்ன செய்ய வேண்டும்? நான் 25 நிமிடங்களுக்கு முன்பு இங்கு வந்தேன், ஆனால் நீங்கள் வருவதைப் படமெடுக்க வேண்டும் என்று அவர்கள் என்னைக் காத்திருக்க வைத்தனர். அது என் தவறு அல்ல. தேவி ஸ்ரீ பிரசாத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சின் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்கும் பிரச்சனைகள் இருப்பது தெளிவாகிறது. இதனால்தான் ‘புஷ்பா 2’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.