சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நேற்றுமுன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால், அன்று முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. அதன்படி மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் வரை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக துரைப்பாக்கம் பிரதான சாலையில் காலை முதல் மாலை வரை மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே வேளச்சேரி மெயின்ரோட்டில் விழுந்த மரத்தை நகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். கிண்டி பள்ளிவாசல் காலனி, வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதேபோல் சென்னையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் வெளியேறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காசிமேட்டில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனிடையே மாலையில் மீண்டும் லேசான சாரல் மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், வானிலை மிகவும் குளிராகவும் காணப்பட்டது. ராயப்பேட்டை ஜிபி சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் செல்கின்றன. மோசமான வானிலை காரணமாக மதுரை, திருவனந்தபுரம், கோவை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் பறந்தன. மழை சிறிது ஓய்ந்ததும் ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் அவசரமாக வெளியேற்றப்பட்டு விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.
இதேபோல் சென்னையில் இருந்து ஹைதராபாத், டெல்லி, செகந்திராபாத், மும்பை, லக்னோ உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 8 விமானங்கள் தாமதமாக வந்தன. மழை காரணமாக 7 விமானங்கள், 8 புறப்படும் விமானங்கள் உட்பட 15 விமானங்கள் தாமதமாக வந்தன. மாநகராட்சி தரவுகளின்படி, சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அதிகபட்சமாக மணலியில் 13 செ.மீ., எண்ணூர் துறைமுகம் மற்றும் பள்ளிக்கரணையில் தலா 7 செ.மீ., தரமணியில் 6 செ.மீ., கிண்டியில் 5 செ.மீ., மீனம்பாக்கம், நந்தனம், நுங்கம்பாக்கம் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.