சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சென்னையை நெருங்கும் நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரான பிறகு ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், மெட்ரோ ரயில் சேவை எந்த இடையூறும், தாமதமும் இன்றி வழக்கம் போல் இயங்குகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலைய படிக்கட்டுகள் மற்றும் லிப்ட்களை பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுண்ட், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். உதவிக்கு, 1860 425 1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், மேலும் பெண்கள் உதவி எண் 155370 என அறிவிக்கப்பட்டுள்ளது.