பெங்களூரு: ஹாசனில் சித்தராமையாவுக்கு ஆதரவான மாநாடு அவரது தலைமையில் நடைபெறும் என துணை முதல்வர் சிவக்குமார் அறிவித்துள்ளார். ‘முடா’ வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சிகளுக்கு பலத்தை காட்ட, வரும் 5ம் தேதி அஹிந்தா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கான பொறுப்பை அமைச்சர்கள் மகாதேவப்பா மற்றும் ராஜண்ணாவிடம் அவர் ஒப்படைத்திருந்தார்.
சித்தராமையா ஆதரவாளர்கள் சார்பில் மாநாடு நடத்தப்படும் என்று முதலில் கூறப்பட்டது. சில காங்கிரஸ் தலைவர்கள் இதை விரும்பவில்லை. கட்சி தலைமை மாநாட்டை நடத்த வேண்டும் என, உயர்மட்டத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சித்தராமையா ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி மாநாட்டை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநாடு தொடர்பாக பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சிவக்குமார், பழைய மைசூர் பகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தராமையா. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் பதவியில் இல்லை.
நாங்கள் ஒரே கட்சிக் கொடியைப் பயன்படுத்துகிறோம். கட்சிக்குள் ஹாசன் மாநாட்டை நடத்த வேண்டும் என்று உயர்மட்ட தலைவர்களிடம் கோரிக்கை வைத்தேன். எனது தலைமையில் மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளனர். வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் மாநாடு நடத்தப்படும். மடாதிபதி சந்திரசேகர் சுவாமிகள் முஸ்லிம்களின் வாக்குரிமை குறித்து பேசியது தவறு. அவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாஜக அரசியல் செய்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மடாதிபதி நிர்மலானந்த சுவாமிகளின் மொபைல் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது. இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் சந்திரசேகர் சுவாமிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டின் மூலம் தனது செல்வாக்கை காட்டி, முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என சித்தராமையா கனவு கண்டார். ஆனால், என் தலைமையில்தான் மாநாடு நடக்கும்’ என்று சிவக்குமார் கூறியுள்ளார்.