புதுடில்லி: ஒரே பள்ளியில் ஒன்றாக படித்த இருவர் ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவ வரலாற்றில் ஒரே பள்ளியில் சேர்ந்து படித்தவர்கள் தளபதிகளாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்திய ராணுவத்தின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியும், இந்திய கடற்படை தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உபேந்திரா திவேதியும், தினேஷ் திரிபாதியும் 1970ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரிவா சைனிக் பள்ளியில் 5ஆம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்தனர். இருவரும் ஆரம்பம் முதலே நல்ல நண்பர்கள். பின்னர் வெவ்வேறு படைகளில் பணியாற்றிய போதிலும், இருவருக்கும் இடையே நட்பு தொடர்ந்தது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ராணுவத்தின் உயரிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படை தளபதியாக அட்மிரல் தினேஷ் திரிபாதி மே 1ம் தேதி பொறுப்பேற்றார்.இந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் திவேதி நேற்று பொறுப்பேற்றார். லடாக்கில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் திவேதிக்கு விரிவான அனுபவம் உள்ளது.
ராணுவத் தளபதியாகவும், கடற்படைத் தளபதியாகவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் நியமனம் செய்யப்படுவது மிகவும் அரிதான நிகழ்வு என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு தெரிவித்தார்.