சென்னை: காது குத்து விழாவாக இருந்தாலும் சரி… திருமணமாக இருந்தாலும் அழகாக இருப்பவர்கள் இன்னும் அழகாக இருக்க மேக்கப் செய்வது இன்றைய காலக்கட்டத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் திருவிழாக்கள் போன்ற எல்லா இடங்களிலும் மற்றவர்களை விட தான் அழகாக தெரிய வேண்டும் என்று எண்ணுவது அனைவருக்கும் உள்ள ஒன்றுதான்.
இளம்பெண்கள் தம்மை அழகுப்படுத்தி கொள்ள பல அழகுசாதனப் பொருட்களை வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்வது வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும் இவற்றைப் பயன்படுத்துவதால், அவர்கள் தங்களை முழுமையாக அழகுப்படுத்தி கொள்கிறார்களா? என்பது சந்தேகத்திற்குரியது.
எனவே பெண்களுக்கான சில இயற்கையான ஆயுர்வேத அழகு குறிப்புகள்: உணவின் ஒரு பகுதியாக அதிகளவு பழங்களை சாப்பிடுங்கள். குறிப்பாக சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் பழங்கள் சாப்பிட வேண்டும். அதிலும் கரும் பச்சை காய்கறிகள் உட்பட பல்வேறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
மஞ்சள், சிறிதளவு பச்சை பால், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிற தடயங்கள் நீங்கிவிடும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் விடியற்காலையில் தண்ணீர் குடிப்பதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேனையும், இஞ்சியையும் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன், முகத்தில் தடவ வேண்டும். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுப்பதற்கு மிகவும் சிறந்தது.