சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பி.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை வடகிழக்கில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கலாம். இதேபோல் நாளை நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் 5ஆம் தேதி வரை சூறாவளி காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.