சென்னை: இதுகுறித்து சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) மாதவரம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கும்.
இம்முகாமில், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், ஐடிஐ, இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டெய்லர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்திலிருந்து தொழில் முனைவோருக்கான ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் வங்கிக் கடன் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
தனியார் துறையில் பணிபுரிய விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், சென்னையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தை நேரிலோ அல்லது https://forms.gle/qsZbxrrSn547L9ep7 என்ற கூகுள் லிங்க் மூலமாகவோ தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே கேட்டுக் கொண்டுள்ளார்.