திருச்சி: 108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவ மூர்த்திக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர கிரீடத்தை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோருக்கு பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் இன்று வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாகீர் உசேன், “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மீதுள்ள பக்தியின் நிமித்தம் இந்த வைர கிரீடத்தை பரிசாக அளித்துள்ளேன். சுமார் அரை அடி உயரமுள்ள இந்த கிரீடம் 3160 காரட் மாணிக்கங்கள், 600 வைரங்கள் மற்றும் மரகதங்களால் ஆனது. ராஜஸ்தானில் இருந்து ஒரு ரூபி கொண்டு வரப்பட்டு கிரீடம் வடிவில் செதுக்கப்பட்டு, வைரம் மற்றும் மரகதம் அமைக்க 400 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டது.
இதை உருவாக்க சுமார் 8 ஆண்டுகள் ஆனது. கிரீடத்தை உருவாக்க ஒரு பெரிய மரகதத்தை கண்டுபிடித்து வாங்க 3 ஆண்டுகள் ஆனது. மாணிக்கத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் வைர கிரீடம் இதுவாகும். பிறப்பால் முஸ்லீமாக இருந்தாலும், ரங்கநாதரிடம் உள்ள பக்தியின் காரணமாக இதைச் செய்தேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டார். இந்த வைர கிரீடத்தின் உண்மையான மதிப்பை அவர் வெளியிடவில்லை.