புதுடெல்லி: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் பயிர்க்கடன் வழங்குகின்றன. இந்த உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
அதை ஏற்று, பாதுகாப்பற்ற பயிர்க்கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இதை அமல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு உத்தரவாதமில்லாத பயிர்க்கடன் உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய கடன் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு நிலங்களை வைத்துள்ள 86 சதவீத விவசாயிகள் இந்த முயற்சியால் பயனடைவார்கள் என மத்திய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.