புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்ததாக, செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை, கடந்த ஜூன், 14-ம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்ட மேல்முறையீட்டு மனுக்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் அவருக்கு கீழ் பணியாற்றியவர்கள். எனவே, இந்த விவகாரத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், மோசடி புகார் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்.
ஏனெனில் வழக்கை தொடர்ந்து ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதனால் விசாரணை தாமதமாகி வருகிறது. “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது இந்த வழக்கின் விசாரணையை பாதித்துள்ளது. எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.