அவிநாசி: அவிநாசி தாலுகாவில் சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மது ஷா வலியுல்லா தர்கா தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்துடன் இணைக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு உருஷ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தர்காவுக்கு வருகின்றனர்.
மேலும் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தர்காவிற்கு வந்து வழிபடுகின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று முன்தினம் அப்பகுதி கிராம மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதுகுறித்து தர்கா ஹஜ்ரத் ஷம்சுதீன் கூறியதாவது:-
தொழில் மேம்பாடு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறுவதால், அனைத்து தரப்பு மக்களும் ஜாதி, மதம், இன வேறுபாடின்றி இந்த தர்காவுக்கு வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த தர்கா மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. வருடாந்தம் நடைபெறும் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவின் போது அனைத்து தரப்பு மக்களும் வருகை தந்து வழிபடுவதாக அவர் தெரிவித்தார்.