மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய கூட்டணியில் இடம் பெறாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
லோக்சபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உறுப்பினர்கள், தலித் மற்றும் ஓபிசிகளின் வாக்குகளை கவரும் வகையில் இடஒதுக்கீடு குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவித்தனர். அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. இந்த விவகாரத்தில் இரு கட்சிகளும் அமைதியாக இருந்திருக்கலாம். ஏனெனில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அரசுப் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
அப்போது, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மசோதா நகலை சமாஜ்வாதி கட்சியினர் கிழித்து எறிந்தனர். இந்த மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த இரு கட்சிகளுக்கும் இடஒதுக்கீடு பற்றி பேச தகுதி இல்லை. இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை பா.ஜ.க.வுக்கும் உள்ளது என்பது தெளிவாகிறது.
அதனால்தான் நிலுவையில் உள்ள மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்வரவில்லை. ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்டோரை ஆதரிக்கும் கட்சி என்ற வகையில், பா.ஜ.க. அரசு கொண்டுவரவிருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அரசின் செலவுகளைக் குறைக்கும்.
இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி செயல்படுத்தப்படும். எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் நலன் கருதி இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.