ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் பாபு. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன் பாபு தனது முதல் மனைவியான வித்யா தேவியின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரி நிர்மலா தேவியை மணந்தார். இவர்களுக்கு மஞ்சு மனோஜ் என்ற மகன் உள்ளார். நடிகர் மோகன் பாபுவின் சொத்து மதிப்பு ரூ. 600 கோடி. மோகன்பாபுவுக்கும், மஞ்சு மனோஜுக்கும் இடையே சொத்துப் பிரச்னை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி சேகரிக்க கடந்த 10-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நடிகர் மோகன் பாபு வீட்டிற்கு செய்தியாளர்கள் சென்றனர். அப்போது, பத்திரிகையாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்த மோகன்பாபு, ஒலிவாங்கியை பிடுங்கி செய்தியாளர்கள் மீது வீசினார். இதில் தொலைக்காட்சி செய்தியாளர் ரஞ்சித்குமார் காயமடைந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நடிகர் மோகன்பாபு நேற்று மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து நிருபர் ரஞ்சித் கூறுகையில், “நடிகர் மோகன்பாபு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். நான் வீடு திரும்பிய பின் வீட்டிற்கு வருவதாக உறுதியளித்துள்ளார்” என்றார்.