சென்னை: நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர் மழையால், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் 21 அடி நிரம்பியுள்ளது.
தற்போது மின்சாரத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளதால் உபரி நீர் திறப்பு 3,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எந்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்று கூறிய அவர், ஏரியில் கழிவுகள் கலப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்தார்.
நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் படிப்படியாக தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், கூடுதல் நிதியில் எஞ்சியுள்ள சில நீர்நிலைகள் தூர்வாரப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரி ஆய்வின்போது அமைச்சர் அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.