மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆத்திக்காட்டுவிளை என்ற கிராமம் உள்ளது. ஊர் பெயர் மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்னைகளை அடுத்து, 1988-ல் ஆத்திக்காட்டுவிளை என்ற பெயரை மாற்றக் கூடாது என்றும், அவ்வாறு எழுதப்பட்ட மற்ற பெயர்களை ஆத்திக்காட்டுவிளை என்று மாற்றி ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் ஆத்திக்கட்டுவிளை என்ற பெயர் எங்கும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஆத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஜியோன்புரம் என்ற குக்கிராமத்தின் பெயரை முழுவதுமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி, உணவு விடுதி, ஊராட்சி அலுவலக பதிவேட்டில் தற்போது ஜீயோன்புரம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ரசீதுகளிலும் ஜீயோன்புரம் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, வீட்டு வரி, குடிநீர் வரி, அனைத்து அரசு அலுவலக பலகைகளிலும் ஆத்திக்காட்டுவிளை என்ற பெயர் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் ஆகியோர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.