இலங்கை அதிபராகப் பதவியேற்றதன் பின்னர், இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திஸாநாயக்கவுக்கு, டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இதையடுத்து அவர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் திஸாநாயக்க தெரிவித்ததாவது:-
இரண்டு வருடங்களுக்கு முன்னர், இலங்கை இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இந்த புதைகுழியில் இருந்து வெளிவர இந்தியா மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளது. குறிப்பாக, கடனற்ற கட்டமைப்பு நடைமுறையை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கு பெரும் நிவாரணமாக இருந்தது. 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 42,000 கோடி) மதிப்பிலான பொருளாதார உதவிக்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையையும் எனது அரசாங்கம் அனுமதிக்காது. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பேன் என பிரதமர் மோடி எமக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளார். இந்தியாவுடனான நமது உறவு எப்பொழுதும் போலவே தொடர்ந்து செழித்து வளருவதை உறுதி செய்ய விரும்புகிறேன். திஸாநாயக்க தெரிவித்தார்.