சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் கடலோரப் பகுதியில் உள்ள உத்தண்டி முதல் ஊரூர் வரையிலான 13 மீனவ குடியிருப்புகளை சேர்ந்த 13 மீனவ குடியிருப்புகளை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா, மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் பள்ளங்களில் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பணி நிறுத்தப்பட்டாலும், மீண்டும் பணிகள் துவங்கியுள்ளன. ஊரூர் குப்பத்தில் பாதாள சாக்கடையில் உள்ள குழாய்கள் சிறியதாக உள்ளதால், அவற்றை பெரிய அளவிலான குழாய்களாக மாற்றும் பணி ஜனவரிக்கு பின் நடக்கும். இந்த 13 மீனவ கிராமங்களிலும் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கு கூடம் அமைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிகளை மீறாமல் கூடம் கட்டினால் தான், இனி வரும் காலங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இடையூறு இல்லாமல் பணியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். பெரிய அளவில் கூடம் கட்டுவதற்கு பதிலாக இரும்பு குழாய்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களை பயன்படுத்தி தற்காலிக கூடம் கட்டி முதல்வர் அனுமதி பெற்று திறந்து வைக்கலாம். மின்சாரத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பட்டா பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்க வேண்டும் போன்ற கடுமையான விதிகளை தளர்த்தி அடிப்படை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வாரியத்தில் மீனவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகள் வரும்போது உறுப்பினர் சேர்க்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசு வழங்கும் சலுகைகளை பெற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். இந்த 13 மீனவ கிராமங்களின் குறிப்பிட்ட கோரிக்கை, நலவாரியம், மனை பட்டா போன்றவை ஆகும்.சென்னை முழுவதும் பட்டா வழங்க துணை முதல்வர் தலைமையில் 7 அமைச்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு, கிராமநத்தம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.