சென்னை: 9 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி, சென்னை பல்லவன் சாலையில் அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தப்படும் என அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் அறிவித்திருந்தது. இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில், போராட்டம் நடத்த அனுமதி தருவதாகவும், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் வழங்கப்படும் என்றும் காவல் துறையினர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சங்கத் தலைவர் டி.கதிரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், “ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் 4 ஆண்டுகளாகியும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன்?
இதற்கு முதலமைச்சரும், துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும். ஓய்வூதியர்களின் வயதை மதித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்’’ என்றார். அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலர் ஆர்.கமலக்கண்ணன் பேசுகையில், “கடந்த காலத்தில் அகவிலைப்படி நிலுவை தொகையை தவணை முறையில் பெற திமுக மற்றும் அதன் கூட்டணி சங்கங்கள் உடன்படவில்லை. அப்போதே சம்மதித்திருந்தால் ஓய்வூதியர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இப்படி ஏமாற்றி ஓய்வூதியர்களின் வாக்குகள் நிச்சயம் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ஓய்வூதியர் பிரச்னைகளுக்காக அ.தி.மு.க.,வும் ஒருங்கிணைத்து வலுவான போராட்டத்தை நடத்தும்,” என்றார். போராட்டத்தின் போது ஓய்வூதியர்கள் தங்களது ஆடைகளை அவ்வப்போது கழற்ற முயன்றபோது, ஓய்வூதியதாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மதியம் 3 மணி ஆகியும் பேச்சுவார்த்தைக்கு துறையினர் அழைக்காததால் ஓய்வூதியர்கள் அனைவரும் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை செயலாளருடன் ஓய்வூதியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “அடுத்த பேச்சுவார்த்தைக்கு வரும் 26-ம் தேதி வருமாறு அழைப்பு விடுத்த செயலாளர், அன்றைய தினம் அகவிலைப்படி உயர்வு குறித்த நல்ல அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். மேலும் 3 மாதத்திற்கான பணப்பலன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்,” என்றனர்.