டெல்லி: நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தலைமை நீதிபதி சந்திரசூட் மறுத்துவிட்டார். டெல்லியில் மூன்று நீதிமன்றங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை நீதிபதி கலந்து கொண்டார்.
அடிக்கல் நாட்டு விழாவில் சந்திரசூட் பேசுகையில், ”நீதிமன்ற கட்டிடம் மற்ற கட்டிடங்கள் போல் செங்கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்படவில்லை. இவை நம்பிக்கையால் உருவாக்கப்பட்டவை. நீதிமன்றங்கள் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் நற்பண்புகளை உள்ளடக்கியது.
இதையடுத்து, புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்க முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். தடயவியல் மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் திறன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டால் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்கள் நியாயமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கடந்த மார்ச் மாதம் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறிப்பிடத்தக்கது.